இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக இருக்கும் நிலையில், 2020 -ல் கால்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் சீர்கெட்டது.
இருநாட்டு ராணுவத்தினரும், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர். இதற்கு தீர்வு காண நான்கு ஆண்டுகளாக, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. அதன் முடிவாக, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, ரஷ்யாவில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் சந்தித்து பேசினர்.
அப்போது, எல்லையில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் முடிவிற்கு, இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். அதன்படி, இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள் :
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை; “உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா?” – நாராயண திருப்பதி ஆவேசம்!
எல்லையில் டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளிகளில் ராணுவத்தினர் கூடாரங்கள் அகற்றப்பட்ட நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.