விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்ற மகாராஜா திரைப்படம் தற்போது வெளிநாட்டு ரிலீஸில் வசூலை குவித்து வருகிறது. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த திரைப்படம் ரஜினிகாந்த் – இயக்குனர் ஷங்கர் காம்போவில் உருவான 2.0 படத்தின் சாதனையை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.
கதாநாயகன், வில்லன், கெஸ்ட் ரோல் என இவர் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு இந்தி சினிமாவில் வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இந்தி வட்டாரத்திலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50-ஆவது திரைப்படமாக மகாராஜா என்ற திரைப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளிவந்தது. இந்த திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் பெற்ற நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.
மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் கஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் வழங்கி இருந்தார்.
வெளியீட்டிற்கும் முன்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத இந்த திரைப்படம் ரிலீசின் போது வசூலை அள்ளி குவித்தது. தியேட்டர் ரிலீஸில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று ஓ.டி.டி வெளியீட்டிலும் அதிக முறை பார்க்கப்பட்டு அதிலும் ரெக்கார்டுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் படக்குழுவினர் டப்பிங் செய்து சீனாவில் தற்போது ரிலீஸ் செய்துள்ளார்கள். அங்கும் மகாராஜா திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வரை சீனாவில் மகாராஜா திரைப்படம் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சீனாவில் முன்னதாக ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் ரூ.33 கோடி அளவுக்கு வசூல் செய்திருந்தது. அதனை மகாராஜா திரைப்படம் நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மொழியில் உருவான சினிமா வெளிநாடுகளிலும் பாராட்டுகளை பெற்று வருவது கவனிக்கத்தக்கது.
.