தேனி: `புரோட்டாவில் நெஞ்சு முடி; ஹோட்டலை மூடு'- வம்படியாக பஞ்சாயத்து; நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

By
On:
Follow Us

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த தம்பதி சரவணன், பாக்கியலட்சுமி. இவர்கள் அல்லிநகரம் சிவசக்தி விநாயகர் கோயில் அருகே பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலுக்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நித்யானந்தம் என்பவர் புரோட்டாவில் முடி இருந்ததாகக் கூறி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். சரவணன் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் வேறு புரோட்டா தருவதாகக் கூறியிருக்கிறார்.

ஹோட்டல்

அதையேற்க மறுத்த நித்யானந்தம் ஹோட்டலை காலி செய்துவிடுவதாகவும், கொலைமிரட்டல் விடுத்தும் சென்றிருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த சரவணன் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை எடுத்து பார்த்திருக்கிறார். அதில் நித்யானந்தம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது வேண்டுமென்றே தன் நெஞ்சில் இருந்த முடியை பிய்த்து புரோட்டாவில் போட்டு பிரச்னை செய்தது தெரியவந்தது. இது குறித்து அல்லிநகரம் போலீஸாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து, நித்யானந்ததை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாக்கியலட்சுமி ஹோட்டல் உரிமையாளர் சரவணன், “அடிக்கடி சாப்பிட வருவது வழக்கம். அவ்வாறு வரும்போதெல்லாம் உணவு சரியில்லை எனக் கூறி தகராறில் ஈடுபடுவார். டிசம்பர் 6 ஆம் தேதி இரவு சாப்பிட வந்தபோது, சாப்பிட்டுவிட்டு கூடுதலாக குழப்பு பார்சல் கேட்டார். நாங்கள் தரமறுத்தோம்.

ஹோட்டலில் தகராறு

மறுநாள் வழக்கம்போல சாப்பிட வந்தவர், தன்னுடைய நெஞ்சு முடியை பிய்த்து சாப்பிட்டு கொண்டிருந்த புரோட்டாவில் போட்டு பிரச்னை செய்தார். என் மனைவியையும், ஹோட்டலில் வேலை செய்யும் வீராச்சாமி என்பவரையும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஹோட்டலை காலி செய்யச் சொல்லி மிரட்டிவிட்டு சென்றார். இதையடுத்து சிசிடிவியை பார்த்தபோது தான் உண்மை தெரிந்தது” என்றார்.

இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், “தேனி நகரில் ஹோட்டல் தொழில் செய்வதில் பல இடையூறுகள் இருக்கிறது. போலி நிருபர்கள், வழக்கறிஞர்கள், ஜாதி அமைப்புகள், கட்சி நிர்வாகிகள் என பலரும் ஹோட்டலுக்கு வந்து நன்கொடை கொடுங்கள், இலவசமாக உணவு கொடுங்கள் என மிரட்டி தொந்தரவு செய்கின்றனர்.

ஹோட்டல்

நன்கொடை, இலவசமாக உணவு கொடுக்க மறுத்தால் ஹோட்டல் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பல்லி, தலைமுடி, புழு, பூச்சி இருப்பதாகக் கூறி பிரச்னையில் ஈடுபட்டு கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறிக்க முயல்கின்றனர். எனவே இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements