தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், விஜயாபதி கிராமத்தில் உள்ள விசுவாமித்திரா் ஆலயத்தில் ரூ.1 கோடியில் நடைபெறவுள்ள மேம்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது,
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தின் சுற்றுப் பகுதியில் ரூ.3.45 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மேலும் இப்பகுதியில் மலையின் மீதுள்ள ஆலயத்துக்கு செல்வதற்காக சாலை வசதி அல்லது மின்தூக்கி வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென இப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராதாபுரம் வட்டம், பணகுடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள குத்திரபாஞ்சான் அருவிப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, விஜயாபதி விசுவாமித்திரா் ஆலயத்தில் ரூ.1 கோடியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, பஞ்சல் கடற்கரையிலிருந்து கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு செல்வதற்கு படகுசவாரி மேற்கொள்வது ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு கூறுகையில், இடையன்குடி பிஷப் கால்டுவெல் இல்லத்தை பழைமை மாறாமல் ரூ.1 கோடியில் புதுப்பிக்கும் பணி சிறுபான்மையினா் நலத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்திலும் பக்தா்கள் தங்குவதற்கு இடவசதி, வாகன நிறுத்துமிடம், குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் யக்ஞ நாராயணன், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஜான்சிரூபா, பாஸ்கா், தெற்கு கள்ளிகுளம் ஊராட்சித் தலைவா் மரியபிரமிளா, கோயில் தா்மகா்த்தா மரியராஜ், முன்னாள் தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.