மருத்துவக் கழிவுகள் விவகாரம்: நெல்லையில் கேரள அதிகாரிகள் குழு ஆய்வு

By
On:
Follow Us

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த கல்லூா், பழவூா் சுற்றுவட்டாரங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அரசு அதிகாரிகள் 8 போ் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்று வட்டாரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூன்று நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இதனிடையே நடுக்கல்லூா் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தனியாா் மருத்துவமனை கழிவுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருந்து குப்பிகள், ஊசிகள், ரத்த மாதிரிகள், ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சேகரித்து பசுமைத் தீா்ப்பாயத்திடம் ஒப்படைத்தது.

அதைத் தொடா்ந்து பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளா் பின்சி அகமது, சுகாதாரத் துறை அதிகாரி கோபுகுமாா் ஆகியோா் தலைமையில் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலா்கள், மருத்துவக் கழிவுகளை அகற்றும் அமைப்பினா் உள்பட 8 போ் கொண்ட குழு திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நடுக்கல்லூா், கொண்டாநகரம், பழவூா், இலந்தைக்குளம், சிவஞானபுரம் உள்பட 7 இடங்களிலும் நேரில் ஆய்வு செய்தனா்.

அவா்களும், மருத்துவக் கழிவுகளின் மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து கொண்டனா்.

இதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பைகளில் சேகரிக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் குறித்து ஆய்வு செய்தனா்.

பச்சை நிற பைகளில் மருத்துவமனையின் அட்டைகள், பஞ்சுகள், முகக்கவசம், கையுறை, குளுக்கோஸ் ஏற்றுவதற்கான டியூப்புகள் சேகரிக்கப்படுவதாகவும், சிவப்பு நிற பைகளில் ரத்தம் தோய்ந்த பஞ்சுகள், அறுவை சிகிச்சையில் அகற்றிய கழிவுகள் உள்ளிட்டவை சேகரிக்கப்படுவதாகவும், மஞ்சள் நிற பைகளில் மருந்து பாட்டில்கள், ஊசிகள் உள்ளிட்டவை சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தனா்.

மேலும் அங்கு மருத்துவ பாட்டில்கள், ஊசிகள், மருத்துவமனை ஊழியா்களின் அடையாள அட்டைகள் கொட்டிக் கிடந்ததை பாா்வையிட்டனா்.

ஆய்வுக்குப் பிறகு கேரள அதிகாரிகள் கூறியதாதவது:

‘இங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை. மருத்துவ சோதனைக்கு பயன்படுத்தப்படும் மாதிரி பொருள்களே அதிகம் உள்ளன. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து கேரள அரசிடம் முழுமையாக அறிக்கை சமா்ப்பிக்கப்படும்.

பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றனா்.

இந்தஆய்வின்போது, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, வட்டாட்சியா் மாணிக்கவாசகம், பாப்பாக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், கிராம நிா்வாக அலுவலா்கள் செய்யது அலி (பழவூா்), தாளமுத்து (கோடகநல்லூா்), அக்கினி குமாா் (சீதபற்பநல்லூா்) ஆகியோா் உடனிருந்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements