இதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படும் என்றும், அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படாமல் அதே வகுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வி உரிமைச் சட்டத்தில் (Right to Education Act) 2019-ல் மத்திய அரசு கொண்டுவந்த இந்த திருத்தத்தை ஏற்கெனவே 16 மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் வகையில் மத்திய அரசு இதை ரத்து செய்திருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் செயலாளர், “மத்திய கல்வி அமைச்சகம் ஒரு பெரிய முடிவாக, no-detention policy-யை ரத்து செய்திருக்கிறது. 5, 8-ம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்கள், இரண்டு மாதங்களுக்குள் தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு உண்டு. அதிலும் தேர்ச்சிபெறாவிட்டால் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படமாட்டார்கள். அதேசமயம், 8-ம் வகுப்பு வரை யாரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள். குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.” என்று கூறினார்.