அடுக்கப்படும் இவ்வளவு விமர்சனங்களுக்கும் இன்னும் சில முக்கிய காரணங்களும் இருக்கின்றன. “காட்பாடி சட்டமன்றத் தொகுதி, வேலூர் எம்.பி-யின் கட்டுப்பாட்டில் கிடையாது. அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. கதிர் ஆனந்த் காட்பாடியில் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை அவர் ஏற்பாடு செய்த தனிப்பட்ட நிகழ்ச்சியாகவே பார்க்க முடியும். அப்படியிருக்கும்போது, காவல்துறையினர் கண்ணியம் தவறி எப்படி செயல்படலாம்’’ என்கிற விமர்சனத்தை எதிர்க்கட்சியினர் முன் வைக்கின்றனர்.
எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. காரணம், வேலூர் மாவட்டக் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிவிப்பு தான் சர்ச்சைக்கு மூலகாரணமாக மாறியிருக்கிறது. கதிர் ஆனந்த் பிறந்த நாள் கொண்டாடக்கூடிய அவரின் வீடு, விருதம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியக்கூடிய 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40 காவலர்களை விழா நடைபெறக்கூடிய கதிர் ஆனந்த் வீட்டுப் பகுதியில் காலை 9 மணியில் இருந்தே டூட்டி பார்க்கச் சொல்லி, காவலர்களின் பெயர், செல்நம்பர்களுடன்கூடிய பட்டியல் வெளியிடப்பட்டது.

காட்பாடியை உள்ளடக்கிய அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜெகத்ரட்சகன் தான் எம்.பி-யாக இருக்கிறார். அப்படியிருக்கும்போது, கதிர் ஆனந்த்தின் தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டதா, அப்படி கொடுத்திருந்தாலும் காவல்துறையினரின் நடைமுறை இதுதானா என்கிற குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்புகின்றனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், `Birthday டூட்டி’ என்பதை `B டூட்டி’ என சுருக்கமாக சந்தேகம் வராமல் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மொத்தத்தில் ஒரு அரசியல் நிகழ்ச்சியாகவே கதிர் ஆனந்த்தின் பிறந்த நாள் நிகழ்ச்சியும் நடந்தேறியது. ஏற்கெனவே, “போலீஸார் யாருக்கெல்லாம் `சல்யூட்’ அடிக்க வேண்டும் என்கிற காவல் நிலைய ஆணை விதிகள் தெளிவுப்படுத்தியிருக்கின்றன. குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், கேபினட் அமைச்சர்கள், நீதிபதிகள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்குத்தான் போலீஸார் கட்டாயமாக சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி, காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பணிநிலைகளுக்கு ஏற்ப சல்யூட் அடிக்க வேண்டும். ஆனால், காவல் நிலை ஆணை விதிகளில் எந்த இடத்திலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, சட்டமன்ற உறுப்பினருக்கோ சல்யூட் அடித்து மரியாதை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை’’ என காவல்துறை உயரதிகாரிகளே தெரிவிக்கின்றனர். நடைமுறை ஆணையை மீறி வேலூர் மாவட்டக் காவல்துறையினர் செயல்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.