வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க தேசிய மாணவர் படையினர் முக்கியப் பங்களிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் என்சிசி அமைப்பின் குடியரசு தின முகாம் ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. தில் நாடு முழுவதிலும் இருந்து 2,361 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 27-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியுடன் இந்த முகாம் நிறைவடையும்.
இந்நிலையில், என்சிசி முகாமில் திங்கள்கிழமை பங்கேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: என்சிசி முகாமில் மாணவர்கள் காட்டிவரும் ஒற்றுமையும் ஒழுக்கமும் பாராட்டத்தக்கவை. இந்தியர் பலராயினும் ஆன்மா ஒன்றுதான்; பல்வேறு கிளைகள் இருந்தாலும் வேர் ஒன்றுதான்; பல்வேறு ஒளிக் கதிர்கள் இருந்தாலும் வெளிச்சம் ஒன்றுதான்.