2022, அக்டோபர் 14. கன்னியாகுமரி மாவட்டம் ராமவர்மஞ்சிராயில் உள்ள காதலி கிரிஷ்மா வீட்டுக்கு சென்ற 23 வயது ஷரோன் ராஜ், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து அடுத்த 11 ஆவது நாளில் உயிரிழந்தார். திட்டமிட்டு காதலனை வீட்டுக்கு வரவழைத்து பூச்சிக்கொல்லி கலந்த ஆயுர்வேத டானிக்கை கொடுத்து கொலை செய்ததாக 22 வயதான கிரிஷ்மா மீது வழக்கு தொடரப்பட்டது. கொலை செய்யப்பட்ட ஷரோன் திருவனந்தபுரம் மாவட்டம் பாறைசாலையைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கு கேரளாவின் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சுமார் 2 ஆண்டு கால விசாரணை முடிவில், கிரிஷ்மாவை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி பஷீர், அவருக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஷரோனை கொலை செய்த நாள் முதல் தனக்கே தெரியாமல் கிரிஷ்மா தன் உடன் ஆதாரங்களை வைத்திருந்ததாக கூறிய நீதிபதி, நேரடி சாட்சிகள் இல்லாத போதும், தடயவியல் ஆதாரங்களுடன் சிறப்பாக காவல்துறை விசாரணை நடத்தி உள்ளதாக பாராட்டுகளை தெரிவித்தார்.
மரண தண்டனை தேவையற்றது என்றும் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கிரிஷ்மா தரப்பில் வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஷரோனை மட்டுமல்ல, காதலின் உன்னத உணர்வையும் சேர்த்தே அவர் கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டது.
கிரிஷ்மா மீதான காதலுக்கு அடிமையாக இருந்த ஷரோன், 11 நாட்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப்படுக்கையில் இருந்தபோதும் காதலியைக் காட்டிக்கொடுக்கவில்லை என நீதிபதி பஷீர் சுட்டிக்காட்டினார். துரோகத்தை எதிர்கொண்டாலும், மரணப் படுக்கையிலும் கிரிஷ்மாவை ஷரோன் ராஜ் நேசித்துள்ளதாகவும் அவருக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்று நினைத்ததாகவும் தனது 586 பக்க தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஷரோனுக்கு பெரும் துரோகத்தை கிரிஷ்மா இழைத்துள்ளதாக கூறிய நீதிமன்றம், அவருக்கு எதிரான 48 சூழ்நிலை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அதிகபட்ச தண்டனை தருவதில் எந்த தடையும் இல்லை என்றது. நெருக்கமான உறவில் இருந்துக்கொண்டே பலமுறை ஷரோனை கொலை செய்ய கிரிஷ்மா முயன்றுள்ளதாகவும், அதற்கு விஷம் கலந்த ஜூஸில் சேலஞ்ச் செய்த சம்பவம் சான்று என்றும் நீதிபதி பஷீர் தெரிவித்தார்.
மேலும், கொலைக்காக ஒவ்வொரு கட்டமாக காய் நகர்த்தியது, கொடூரமான மற்றும் இரக்கமற்ற மனநிலையை காட்டுகிறது என்ற அரசு தரப்பு முன்வைத்த வாதத்தை உறுதி செய்தது நீதிமன்றம். உள் உறுப்புகள் செயலிழந்து ஷரோன் இறந்தார் என்ற மருத்துவ அறிக்கை அடிப்படையில், இது திட்டமிட்ட கொலை என்பது உறுதியாவதாகவும் சுட்டிக்காட்டியது.
விசாரணையின் போது கிரிஷ்மா கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்றது திசை திருப்பும் தந்திரமாக கூறிய நீதிபதி, வயது, கல்வி தகுதிகள், குற்றவியல் வரலாறு இல்லாமை, பெற்றோருக்கு ஒரே மகள் உள்ளிட்ட காரணங்களுக்காக தண்டனையை குறைக்க வேண்டும் என்ற பிரதிவாதியின் வாதத்தை ஏற்கமுடியாது என்றார்.
நெருக்கமான புகைப்படங்களை வைத்து ஷரோன் மிரட்டினார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்ற காவல்துறை விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம், ஷரோனுக்கு கிரிஷ்மா விஷம் கொடுத்தது, எந்தவித தூண்டுதலும் இன்றி நடந்தது என்று விவரித்தது. தீர்ப்பு வாசிக்கும்போது அழத் தொடங்கிய கிரிஷ்மா, மரணத் தண்டனை என அறிவித்ததும் அழுகையை நிறுத்தி மௌனமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, காதலை கொன்ற குற்றம், விசாரணை திசை திருப்பி விட்டது என கிரிஷ்மாவுக்கு மொத்தம் 15 ஆண்டுகள் சிறை மற்றும் மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் கொலையை மறைக்க உதவிய கிரிஷ்மாவின் தாய்மாமாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
January 21, 2025 8:19 AM IST
Sharon Raj Murder | “11 நாட்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப்படுக்கை” – கிரிஷ்மாவுக்கு உச்ச தண்டனை ஏன்.. நீதிபதி சொன்ன விஷயம்!