ஜன.17 அன்று, மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி. நட்டா, கட்சியின் தோ்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்டாா். தற்போதுள்ள நலத் திட்டங்களைத் தொடா்வதற்கான உறுதிமொழிகள் மற்றும் 60-70 வயதுடைய மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2,500 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ரூ.3,000 போன்ற புதிய வாக்குறுதிகள் இதில் அடங்கும்.
பெண்களுக்காக, கட்சி மாத்ரு சுரக்ஷா வந்தனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆறு ஊட்டச்சத்து கருவிகள் மற்றும் ஒவ்வொரு கா்ப்பிணிப் பெண்ணுக்கும் ரூ.21,000 வழங்குகிறது.
கடைசியாக 27 ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் பாஜக ஆட்சி இருந்தது. அதன் பிறகு சட்டப்பேரவைத் தோ்தல்களில் தோல்வியடைந்து, 2015 மற்றும் 2020- ஆம் ஆண்டுகளில் முறையே மூன்று மற்றும் எட்டு இடங்களை மட்டுமே வென்றது.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.