Last Updated:
Maharashtra | மகாராஷ்டிராவில் ரயிலில் தீ பிடித்ததாக பரவிய வதந்தியால், கீழே குதித்தவர்கள் மற்றொரு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் கர்நாடக விரைவு ரயில் மோதியதில் 12 பயணிகள் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து, மும்பைக்கு புஷ்பக் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பச்சோரா என்ற இடத்தை நேற்று மாலை ஐந்து மணிக்கு அடைந்தது. அப்போது ரயிலில் தீப்பிடித்து விட்டது என யாரோ புரளி கிளப்பிய நிலையில், பயணிகள் சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர்.
ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டது என்ற பயத்தால் பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறிக் கொண்டு கீழே இறங்கி அருகில் இருந்த தண்டவாளம் வழியாக ஓடினர். அதேநேரத்தில் அந்த தண்டவாளத்தில் வந்த கர்நாடகா விரைவு ரயில் பயணிகள் மீது மோதியது.
இதில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
அபாய சங்கிலி ஒலித்ததால் புஷ்பக் ரயில் திடீரென நிறுத்தப்பட்டதும், அப்போது பிரேக்கில் உராய்வு ஏற்பட்டு தண்டவாளத்தில் தீப்பொறி பறந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீப்பொறியை பார்த்து பொதுப் பெட்டியில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் கீழே குதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஜல்கானில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ரயில் விபத்தில் படுகாயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
January 23, 2025 6:44 AM IST
Maharashtra | தீ விபத்து வதந்தியால் ரயிலில் இருந்து குதித்த பயணிகள்.. ஒரே நேரத்தில் 12 பேர் உயிரை இழந்த சோகம்!