பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் கடந்த 16-ம் தேதி புகுந்த கொள்ளையன் அவரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதையடுத்து படுகாயமடைந்த சைஃப் அலிகானை வீட்டு பணியாளர்கள் மீட்டனர். உடனடியாக அங்குள்ள லீலாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்ட சூழலில், சைஃபை தாக்கிய நபர் மும்பை தானேவில் கைது செய்யப்பட்டார். சைஃப் அலிகானின் வீட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கசர்வதவல்லி என்ற இடத்தில் அந்த நபர் பிடிபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், 30 வயதான அந்த நபர் விஜய் தாஸ் என்ற பெயருடன், தானேவில் உள்ள பாரில் ஊழியராகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மாதக்கணக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் பரவின. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர் கடந்த 21 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
5 நாட்களில் அவர் சிகிச்சையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதுகுறித்து பிரபல இதயவியல் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
சைஃப் அலி கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை பார்க்கும் போது அவர் உண்மையிலேயே அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இங்கு எனது தாயாருக்கு 2022இல் செய்யப்பட்ட முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை வீடியோவை பதிவிட்டுள்ளேன்.
அறுவை சிகிச்சை முடிந்த 2ஆவது நாளே அவர் நடக்க ஆரம்பித்து விட்டார். மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தைப் பாதுகாக்கும் cerebrospinal fluid leak மட்டுமே சைஃப் அலி கானுக்கு சரி செய்யப்பட்டது.
இன்றைக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் எல்லாம் 4ஆவது நாளில் படிக்கட்டுகளில் ஏறி நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எனவே ஒரு விஷயத்தை பற்றி விமர்சிக்கும் முன்பு அதுபற்றி கொஞ்சமாவது படித்துக் கொள்ளுங்கள். சோஷியல் மீடியாவில் அறியாமையால் கருத்து கூறாதீர்கள்.
For people doubting if Saif Ali Khan really had a spine surgery (funnily even some doctors!). This is a video of my mother from 2022 at the age of 78y, walking with a fractured foot in a cast and a spine surgery on the same evening when spine surgery was done. #MedTwitter. A… pic.twitter.com/VF2DoopTNL
— Dr Deepak Krishnamurthy (@DrDeepakKrishn1) January 22, 2025
உங்களுக்கு தெரியாவிட்டால் துறை சார்ந்த நிபுணர்களை கேளுங்கள். என்று கூறியுள்ளார். 5 நாட்களில் சைஃப் அலி கான் குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பியதை மருத்துவ துறையின் சாதனை என்று சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்றைக்கு மேஜரான முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டபோதிலும் அவர்களுக்கு 1 நாள் மட்டுமே பெட் ரெஸ்ட் தேவைப்படுவதாக சில மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
January 23, 2025 5:16 PM IST