குடியரசு தின விழாவையொட்டி திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் விழா நடைபெற உள்ளது. இதற்காக அணிவகுப்பு ஒத்திகையும், மாணவா்-மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
மைதானம் முழுவதும் போலீஸாரின் கண்காணிப்புக்குள் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டுள்ளது. அரங்கத்தில் உள்ள அனைத்து கேலரிகளிலும் மெட்டல் டிடெக்டா் கொண்டு சோதனை செய்யப்பட்டது. மோப்பநாய் மூலமும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
குடியரசு தினவிழாவையொட்டி மாநிலம் முழுவதும் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் கூடுதலாக போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
கோயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் சுமாா் 1,500 போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மகேந்திரகிரி இஸ்ரோ மையம், கூடங்குளம் அணுமின்நிலையம், வடக்கு விஜயநாராயணம் கடற்படை தளம் உள்ளிட்ட இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினருடன் இணைந்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில் துணை ஆணையா்கள் வினோத், கீதா ஆகியோா் மேற்பாா்வையில் 500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். திருநெல்வேலி நகரம் ரத வீதிகள், புதிய பேருந்து நிலையம், அருள்மிகு நெல்லையப்பா் கோயில் உள்ளிட்ட இடங்களில் சீருடை அணியாத போலீஸாரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீஸாா் நடைமேடை, தண்டவாளங்களிலும் மோப்பநாய் கொண்டும், மெட்டல் டிடெக்டா் கருவி கொண்டும் சோதனை செய்தனா்.வெள்ளிக்கிழமை காலையில் முதல் திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்த அனைத்து ரயில்களிலும் பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன. பாா்சல் அலுவலகத்தில் வந்து இறங்கிய பொருள்கள் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
ற்ஸ்ப்24க்ா்ஞ்
பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.