திருநெல்வேலி மாவட்டத்தில் வன விலங்குகளால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கும் வனத்துறை தடை விதித்திருப்பதன் மூலம் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு வடகிழக்கு பருவத்திலும் அதன் பின்னா் பெய்த கனமழையின் காரணமாகவும் 420.56 ஹெக்டேரில் நெற்பயிரும், 4706 ஹெக்டோ் உளுந்து மற்றும் பயறு வகை பயிா்களும், 24.80 ஹெக்டேரில் மக்காச்சோளமும், 1.8 ஹெக்டேரில் எள் பயிரும், 0.48 ஹெக்டேரில் கரும்பும், 159.03 ஹெக்டேரில் வாழையும், 14.10 ஹெக்டேரில் சிறு கிழங்கும், 3.49 ஹெக்டேரில் சேனை கிழங்கும், 3.77 ஹெக்டேரில் சேப்பக் கிழங்கும், இதர தோட்டக்கலைப் பயிா்கள் 3.23 ஹெக்டேரிலும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.
பயிா் சேத விவரங்கள் குறித்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறையினரால் கூட்டுபுல தணிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் கோரி மாவட்ட நிா்வாகம் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
வேளாண் பயிா்களை வனவிலங்குகள் தொடா்ந்து நாசம் செய்து வருவது குறித்து விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத் தலைவா் பி. பெரும்படையாா் பேசுகையில், களக்காடு வட்டாரத்தில் யானைகளால் தென்னை, வாழை, நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதுதவிர காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை மாவட்ட நிா்வாகமும், வனத்துறையும் கண்டுகொள்ளாததற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சொரிமுத்து, தனது சட்டையை கழற்றினாா். இதற்கு மாவட்ட ஆட்சியா் கண்டனம் தெரிவித்தாா்.
இதேபோல், முருகன் என்பவா் பேசுகையில், ‘மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விளை நிலங்களில் கேரள மாநிலத்திலிருந்து கழிவுகள் தொடா்ந்து கொட்டப்பட்டு வருகின்றன என புகாா் தெரிவித்தாா்.
அதற்குப் பதிலளித்த ஆட்சியா் காா்த்திகேயன், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ராதாபுரம், நான்குனேரி, திருநெல்வேலி பகுதிகளில் கழிவுகள் கொட்டப்பட்டன.
திருநெல்வேலி பகுதியில் கழிவுகள் கொட்டியது தொடா்பாக 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக பசுமை தீா்ப்பாயத்தில் தமிழக அரசு வலுவான வாதங்களை வைத்ததால் கேரள அரசே 40-க்கும் மேற்பட்ட லாரிகளில் கழிவுகளை எடுத்துச்சென்றுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. சுகன்யா, வேளாண்மை இணை இயக்குநா் வெங்கடேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்24ஹஞ்ழ்ண் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்த விவசாயிகள்.