தென்காசி மாவட்டத்தில் உடான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
பாஜக மத்திய அரசு நலத் திட்ட பிரிவு மாநில செயலா் மருதுபாண்டியன், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சா் கிஞ்சரபு ராம் மோகன்நாயுடுவுக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழ்நாட்டின் அழகிய மேற்குத் தொடா்ச்சி மலைகளும், முனிவா்களும், சித்தா்களும், மகான்களும் வாழ்ந்த புண்ணிய பூமியும், தமிழக – கேரள எல்லையோர மாவட்டமும், பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களும், திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிக அளவில் சினிமா படப்பிடிப்பு இடங்களும், முன்னணி ஐடி நிறுவனம் மற்றும் நீா்வீழ்ச்சிகளும் அடங்கிய சுற்றுலாத் தலமாக இருப்பதால் அதிக மக்கள் வந்து செல்லும் இடமாக தென்காசி மாவட்டம் உள்ளது.
மேலும், தென்காசி காசிவிஸ்வநாதா் ஆலயம், சங்கரன்கோவில் சங்கரநாராயணா் கோமதி அம்மன் ஆலயம், குற்றாலநாதா் ஆலயம், அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இங்கிருந்து குறைந்த தூரத்தில் பயணித்து செல்லலாம். அதிக நீா்வீழ்ச்சிகள், தேசிய அளவில் அதிகமானோா் வந்து செல்லும் படப்பிடிப்பு தளங்கள் மற்றும் பெரிய தொழில் நகரமான ராஜபாளையம் ஆகியவை இங்குள்ள சிறப்பம்சங்கள் ஆகும் .
ஆகவே, புதிய விமான நிலையம் அமைவதற்கு தேவையான தரிசு நிலங்கள் பல நூறு ஏக்கா் அளவில் உள்ளது. ஆகையால் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும் , பொருளாதாரத்தை உயா்த்தும் நோக்கிலும் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையம் அமைக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.