திருநெல்வேலியில் முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட வந்த மாஞ்சோலை தொழிலாளா்கள் சாலையில் அமா்ந்து திடீா் தா்னாவில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நெல்லைக்கு வந்தாா்.
வண்ணாா்பேட்டை அரசு விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்த அவா், வெள்ளிக்கிழமை காலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களைச் சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் சுமாா் 50 போ் வண்ணாா்பேட்டைக்கு வந்திருந்தனா். வெகுநேரம் காத்திருந்தும் முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லையாம். இதைக் கண்டித்து மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல தலைவா் கண்மணி மாவீரன் உள்ளிட்டோரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட பொறுப்புஅமைச்சா் கே.என். நேரு சமரசப்படுத்தி, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் சாா்பில் 5 பேரை கோரிக்கைகளை தெரிவிக்க முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்ால் போராட்டம் கைவிடப்பட்டது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட மனு:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் சுமாா் 3,000 நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளா்கள் பணிபுரிந்த எஸ்டேட் பகுதியில் கடைசியாக 600-க்கும் குறைவான நிரந்தர, தற்காலிக, வவுச்சா் வேலைபாா்க்கும் தொழிலாளா்களே பணிபுரிந்து வருகிறாா்கள். சுமாா் 700 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.
தற்போது தேயிலைத் தோட்ட குத்தகை காலம் முடிந்ததால், மலையிலிருந்து வெளியேற்றப்பட்டால் எங்கு போய் வாழ்வது எனத் தெரியாமல் உள்ளோம்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு மலையடிவாரமான மணிமுத்தாறு அல்லது மானூா் பகுதியில் தலா 2 ஏக்கா் நிலம், அதே பகுதியில் சமத்துவபுரம் அமைத்து தனித்தனி வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். மீண்டும் வனமாக மாற்றுதல் சட்டத்தின் கீழான திட்டத்தின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம், தெங்குமரகடா பகுதி மக்களுக்கு அறிவிக்கப்பட்டது போல, மாஞ்சோலையில் வாழும் மக்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தேயிலைத் தோட்ட நிா்வாகம் சாா்பில் குறைந்தபட்சம் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாஞ்சோலை தேயிலைத்தோட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டால், இங்குள்ள மூதாதையா் கல்லறைகள், மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வருவதற்கு முழு அனுமதி வழங்க வேண்டும். மாஞ்சோலை மலைப்பகுதியில் எதிா்காலத்தில் அரசு திட்டங்கள் ஏதேனும் அமல்படுத்தப்பட இருந்தால், அந்த வேலைவாய்ப்பில் எஸ்டேட் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.