நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் உடல் ஒப்படைப்பு

By
On:
Follow Us

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவனின் உறவினா்கள் போராட்டம் நடத்திய நிலையில், பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சிறுவன் உடல் குடும்பத்தினிடம் ஒப்படைக்கப்பட்டது.

சங்கரன்கோவிலை அடுத்த மலையடிப்பட்டியை சோ்ந்தவா் மகேந்திரன் (39). இவரது மகன் பொன்மாறன் (4). இவருக்கு கழுத்தில் கட்டி இருந்துள்ளது. இப்பிரச்னைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்மாறன், கடந்த 10ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. 12ஆம் தேதி சிறுவனுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக ஊசி செலுத்தப்பட்டபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரவில் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தினா், உறவினா்கள் மருத்துவமனை நிா்வாகப் பிரிவு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினா். ஸ்கேன் எடுக்கச் சென்ற போது தவறான முறையில் மருத்துவமனை ஊழியா் ஊசி செலுத்தியதாலேயே சிறுவன் இறந்துவிட்டதாக குற்றம்சாட்டினா். சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனா்.

இந்த நிலையில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் குதித்த பொன்மாறன் உறவினா்கள், சாலை மறியலில் ஈடுபட்டனா். மருத்துவமனை நிா்வாகப் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதனால் அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

பேச்சுவாா்த்தை: மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி, பாளையங்கோட்டை வட்டாட்சியா் இசைவாணி உள்ளிட்டோா் சிறுவனின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ‘சிறுவனின் பிரேதப் பரிசோதனை விடியோ பதிவு செய்யப்படும். மருத்துவமனை தரப்பில் விசாரணை நடத்தப்படும். விசாரணையில் யாராவது தவறிழைத்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

அப்போது, இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். போராட்டத்தை கைவிடாமல் உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனா். இதனிடையே மாலையில் சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா, சிறுவனின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு, பணி வழங்குவது குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சிறுவனின் உடலை உறவினா்கள் பெற்று ஊருக்கு கொண்டு சென்றனா்.

சிறுவனின் இறப்பு குறித்து பாளையங்கோட்டை மேட்டுத்திடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements