சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வசூலித்த கடன் தவணைத் தொகையை கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி, தூய்மைப் பணியாளா்கள்
முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சங்கரன்கோவில் நகராட்சியில் 60-க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திலிருந்து நகராட்சி மூலமாக வங்கிக் கடன் பெற்றுள்ளனா். அதற்கான தவணைத் தொகையை மாதந்தோறும் சம்பளத்தில் நகராட்சி நிா்வாகம் பிடித்தம் செய்து வருகிறது. ஆனால், அந்த தொகையை கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தவில்லையெனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடனுக்கான தவணைத் தொகையை நீண்டகாலமாகச் செலுத்தவில்லை எனக் கூறி, 7 நாள்களுக்குள் அசல், வட்டியை செலுத்த வேண்டும் என கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திலிருந்து தூய்மைப் பணியாளா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் விளக்கம் பெற தூய்மைப் பணியாளா்கள் சென்றபோது,
முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.